பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொடர் போராட்டம்




அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏறத்தாழ 12 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறார்கள்.


வாரத்துக்கு 3நாட்கள் (தினமும் அரை நாள்பணி) பணியாற்றும் அவர்களுக்கு,மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.


தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வழிகளில் அவர்கள் போராடிவருகின்றனர்.


இந்நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி காலவரையற்ற தொடர் போராட்டத்தை நேற்று சென்னை டிபிஐ வளாகத்தில் தொடங்கியுள்ளனர். தமிழ்நாடுபகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.


தொடர் போராட்டம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து2 ஆண்டுகளாகியும், இன்னும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.


எங்களின் கோரிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியாகும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம்.


ஆனால், எவ்வித அறிவிப்பும் வராதது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், மனவேதனையும் அளித்துள்ளது. எங்களின் கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும். அதுவரை எங்களின் போராட்டத்தைத் தொடர்வோம்'' என்றார்.

Comments

Popular posts from this blog