TNPSC Group 4 Results: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு ரிசல்ட். கட் ஆஃப் வெகுவாக குறையுமா?
டி..என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்றும், காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, சமூக ஊடகங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ட்விட்டர் தளத்தில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. இதுதொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வைரலானது.
இந்தநிலையில், தேர்வாணையம் சில நாட்களுக்கு முன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.02.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி, தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேலும், இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வர்களின் கனிவான தகவலுக்காகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, எனக் குறிப்பிடப்பட்டது.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்றும், காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக போட்டித் தேர்வர்கள் அமைப்பு தமிழ்நாடு அரசுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு 3 வருடங்கள் கழித்து கடந்த 24 ஜூலை 2022 அன்று நடைபெற்றது. இந்த பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 15 ஆயிரம் பணியிடங்களுக்கு 7301 பணியிடங்களே வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், 15 ஆயிரம் என்பது மேலும் அதிகமாகியுள்ளதாலும் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அரசு பணியே உயிர் என்று தன் உயிர் மூச்சாக கொரோனா பெருந்தொற்று காலத்தை கடந்தும் இதையே நம்பி காத்துக்கொண்டு இருக்கும் எங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.
கடந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது கூட பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 10000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 2018ல் 11800 ஆகவும் 2019-ல் 9500 ஆகவும் இருந்தது. தற்போது தேர்வில் வினாத்தாள் கடினமாகவும் தவறான சில கேள்விகளும் இடம் பெற்றதால் கடினமாக படித்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு 7, 031 என்பதை மேலும் 8000 அதிகரித்து 15,000 பணியிடங்கள் வெளியிட வேண்டும் என்று போட்டித் தேர்வர்கள் பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காலியிடங்களின் எண்ணிக்கை 2500 கூடுதலாக சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அதுபற்றிய உறுதியான தகவல் எதுவும் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்படவில்லை.
தற்போது தேர்வர்கள் காலியிடங்களின் எண்ணிக்கையை 15000 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருவேளை தற்போதைய காலியிடங்களின் எண்ணிக்கையை விட, பணியிடங்களை மேலும் அதிகரித்தால், கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment