TNPSC Group 4 Result: குவிந்த 18 லட்சம் பேர்; முடங்கிய டிஎன்பிஎஸ்சி இணையதளம்- தேர்வர்கள் அதிர்ச்சி!
குரூப் 4 தேர்வு நடைபெற்று 8 மாதங்கள் கழித்து முடிவுகள் இன்று வெளியான நிலையில், தேர்வெழுதிய 18 லட்சம் பேரும் குவிந்ததால் டிஎன்பிஎஸ்சி இணையதளமே முடங்கியது.
இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
10,117 காலி இடங்களைக் கொண்ட குரூப் 4 அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதி இருந்தனர். கடந்த ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு இன்று (மார்ச் 24ஆம் தேதி) தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
7 ஆயிரமாக இருந்த காலி இடங்கள்
முன்னதாக குரூப் 4 அரசுப் பணிகளுக்கு 7,301 இடங்கள் மற்றும் 81 விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் என மொத்தம் 7,382 காலி இடங்கள் இருந்த நிலையில், மொத்தப் பணியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.
கூடுதல் மவுசு
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வு என்பதால், இதற்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.
குரூப் 4 தேர்வுக்கு சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 18 லட்சம் பேர் தேர்வை எழுதினர். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளைக் காணக் குவிந்ததால், டிஎன்பிஎஸ்சி இணைய தளமே முடங்கியது.
எனினும் தேர்வர்கள், https://apply.tnpscexams.in என்ற முகவரியை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை நேரடியாகக் காணலாம்.
Comments
Post a Comment