TNPSC GROUP-4: குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை, தாமதத்திற்கான காரணத்தை விளக்கிய டிஎன்பிஎஸ்சி
குரூப் - 4 தேர்வு முடிவு வெளியாக தாமதமானது ஏன் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.
தாமதம் ஏன்?
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், ”குரூப் - 4 தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. குரூப் -4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் மென்பொருள் மூலம் செய்யப்பட்டு, அதிகாரிகள் மூலம் நேரடியாக சரிபார்ப்பு நடக்கிறது.
எந்தவித தவறுகளும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதிக காலம் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். குரூப் - 4 தேர்வு நடைபெற்று 8 மாதங்கள் ஆன பிறகு முடிவுகள் வெளியான நிலையில், அதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.
குரூப் - 4 தேர்வு:
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், இந்தத் தேர்வுக்குகு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.
இதற்கிடையே குரூப் 4 தேர்வுகளுக்காக 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்வு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. சரியாக 8 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகமால் இருந்தது.
8 மாதங்களுக்குப் பின் தேர்வு முடிவுகள்:
முன்னதாக தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் தாமதமான நிலையில், 2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
ஆனால், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. மீண்டும் மார்ச் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
மார்ச் மாதத்தில் ஒரு வாரம் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், ’’தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் மாற்றுத் திறனாளிகள், ஏழைத் தேர்வர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்காமல் குரூப்4 தேர்வு முடிவை உடனே வெளியிட வேண்டும்’’ என்று தேர்வர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக #WeWantGroup4Results என்னும் ஹேஷ்டேக் மார்ச் 8 அன்று இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது.
அதிகபட்சத் தேர்வர்கள் பங்கேற்பு
கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் குரூப் 4 தேர்வில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022-ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றனர்.
கூடுதல் பணியிடங்கள் சேர்ப்பு
இதற்கிடையில் குரூப் 4 அரசுப் பணிகளுக்கு கூடுதலாகப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்படி, விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பணிகளுக்கான மொத்த பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்களின் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
அதேபோல சுருக்கெழுத்தர் தட்டச்சர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,024-ல் இருந்து 1176 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த 24ம் தேதி வெளியானது. தாமதமாக வெளியானதால் இந்த தேர்வு முடிவில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், அத்தகைய முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
Comments
Post a Comment