நீட் விண்ணப்ப கட்டணம் அதிகரிப்பு: தேர்வு முகமை தகவல்



இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம், ரூ.100 அதிகரித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம். அந்தவகையில், நடப்பாண்டுக்கான தேர்வு அறிவிப்பை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருக்கிறது. 

அதன்படி, விண்ணப்பப்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ம் தேதி. விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1,700ம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு ரூ.1,600ம், எஸ்.சி., எஸ்.டி., திருநங்கைகள் பிரிவினருக்கு ரூ.1,000ம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு விண்ணப்ப கட்டணத்தை விட ரூ.100 அதிகம் ஆகும். இதனுடன் ஜி.எஸ்.டி.யும் சேர்த்து வசூலிக்கப்படும்.


நீட் தேர்வை பொறுத்தவரையில், வருகிற மே மாதம் 7ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வை எழுத முடியும். இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவுகளில் இருந்து 200 வினாக்களுக்கு இந்த தேர்வுகள் நடைபெற இருக்கிறது.



 இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு www.nta.ac.in, https://neet.nta.nic.in/ என்ற இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog