'இந்து சமய அறநிலையத் துறை, வனத் துறை பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை கீழ் கொண்டு வரப்படும்': பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த இந்து சமய அறநிலையத் துறை, வனத் துறை பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை கீழ் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்து, உரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: 'அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டங்கள் கட்டிடவும் ரூ .7000 கோடி செலவில் 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை' அரசு தொடங்கி உள்ளது. நடப்பாண்டில் , ரூ.2000 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் ரூ.1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், எண்ணும் எழுத்தும், மாதிரிப் பள்ளிகள், திறன்மிகு பள்ளிகள், உயர்தர ஆய்வகங்கள், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு முன்னோடி முயற்சிகள் கடந்த 2 ஆண்டுகளில் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழக் கூட்டங்களில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தவும் பராமரிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.
இதனை கருத்தில் கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளில் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும். இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து பணிப் பயன்களும் பாதுகாக்கப்படும். ' என்று கூறினார்.
Comments
Post a Comment