6000 ஆசிரியர் பணியிடங்கள் காலி
தொடக்கப்பள்ளிகளில் 6000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தொடக்க வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம், கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை. காலியிடங்களில், மாதம், 5000 ரூபாய் ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு பின், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இரு ஆண்டுகளாக பள்ளிக்கு மாணவர்கள் வராததால், அடிப்படை கற்றல் திறன் பின்தங்கியுள்ளது.
இதை ஈடுகட்ட, 'எண்ணும் எழுத்தும் திட்டம்' வாயிலாக மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
போதிய ஆசிரியர்கள் இல்லாததால், கல்வித்துறையின் உத்தரவுகளை நடைமுறைப் படுத்துவது சாத்தியமில்லை. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒன்றாக அமர வைக்கப்படுகின்றனர்.
இந்நிலை நீடித்தால், குறைந்தபட்ச கற்றல் அடைவுகளை பூர்த்தி அடையாமலே, மாணவர்கள் உயர் வகுப்புகளுக்கு செல்லும் நிலை ஏற்படும் என, ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
ஆசிரியர் கூட்டணி தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
தொடக்க கல்வித்துறை சார்பில் 4989 காலி பணியிடங்களில் 2021 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர் சேர்க்கையோடு ஒப்பிட்டால், 6,000த்துக்கும் மேற்பட்ட இடங்களில், புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆனால், 10 ஆண்டுகளாக பணி நியமனமே இல்லை. வரும் கல்வியாண்டில் காலியிடங்களை நிரப்ப வேண்டும், என்றார்.
Comments
Post a Comment