50,000 மாணவர்கள் தேர்வு எழுத வராதது ஏன்? ஆசிரியர் கொடுக்கும் விளக்கம்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட பிளஸ் 2 தேர்வுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுத வராதது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அதிகாரிகளிடம் ஆசிரியர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வராதது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் மகளிர் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் முத்துவேல்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், இந்த 50000 மாணவர்கள் பரீட்சைக்கு மட்டும் வராமல் போய்விடவில்லை, பல மாதங்களாக பள்ளிக்கே வரவில்லை, பரீட்சைக்கும் வரவில்லை!!
அப்படின்னா டி.சி கொடுத்துட்டு பெயரை நீக்கி இருக்கலாமே என்பீர்கள், அப்படி எல்லாம் சுலபமாக செய்துவிட இயலாது.
EMIS தரவு தளம் வந்த பிறகு மாணவர்களின் ராசி நட்சத்திரம் தவிர அனைத்தும் தலைமை அலுவலகத்திற்கு தெரியும். school domain இல் (பள்ளி தரவு தளத்தில்) இருந்து common poolக்கு (பள்ளிக்கல்வித் துறையின் பொதுவான) போனால் உடனடியாக district administrationக்கு (மாவட்ட நிர்வாகத்திற்கு) தெரிய வரும். அதற்கு Out of school children list (OOSC) (பள்ளிக்கு வரா குழந்தைகளின் பட்டியல்) என்று பெயர். அந்த லிஸ்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியே ஏன் வரவில்லை என்கிற விவரங்கள் நிரப்பி புகைப்பட ஆதாரங்கள் தரவேண்டும். ('ஏம்மா சுகர் பேசண்ட்மா நானு, அவன் பேரு இருந்துட்டு போகட்டும் விடும்மா!!' என்று HMs (தலைமை ஆசிரியர்கள்) கதற வேண்டியது தான்)
மாணவர்களை பள்ளிக்கு வராமல் தடுப்பது எது?!!
2018ல் நீட்டை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை உருவாக்குகிறோம் என்று ஏராளமான பாடங்களை திணற திணற திணித்து வைத்துவிட்டனர். சில ஆயிரம் நீட், ஐ.ஐ.டி இடங்களுக்காக ஒட்டு மொத்த மாணவர்களையும் வதைக்கும் பாடத்திட்டம். (ஆர்வமுள்ளவர்களுக்கு இலவச சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது போல அவர்களுக்கு மட்டும் இந்த நீட்டை உள்ளடக்கிய கூடுதல் பாடப்பகுதிகளை துணைப்பாடங்களாக கொடுத்திருக்கலாம்)
'நீ ஏம்பா எல்லாத்தையும் படிக்கிற பாஸ் மார்க் வேணும்னா அத மட்டும் படிக்க வேண்டியது தானே?!' அதுதான் முடியாது, இப்போ வினாத்தாள் வடிவமைப்புக்கான blue print (மாதிரி கட்டமைப்பு) கிடையாது.
எனது பள்ளியில் பதினோறாம் வகுப்பு சேர்க்கையின் போது 1000 பக்க பயாலஜி புத்தகங்களை வாங்கிய மாணவன் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிப்போய் ஐ.டி.ஐ சேர்ந்து விட்டான்.
தனியார் பள்ளிகள் பதினோறாம் வகுப்பு பாடங்களை skip (தவிர்த்து விடுகிறார்கள்) பண்ணுகிறார்கள் என்று அங்கே ஒரு பப்ளிக் பரீட்சை வைத்தார்கள். அரியர் சேர்ந்து விடுகிறபோது அவ நம்பிக்கை காரணமாக பள்ளிக்கு வருவதற்கான ஆர்வம் குறைந்து போகிறது.
ஆன்ட்ராய்ட் மோகம், அதன் தாக்கம் காரணமாக நமக்கு எல்லாம் தெரியும், 'பணமெல்லாம் ஒரு மேட்டரே இல்ல' எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்து விடலாம் என்கிற ஒரு தவறான நம்பிக்கை ஏற்படுகிறது. படிக்கும் பருவத்திலேயே வேலைக்கு சென்று விடுகிறார்கள்.
பெண் குழந்தைகளை பொறுத்தவரை வேலைக்கு சென்று தனது திருமணத்திற்காக சேமிக்க தூண்டப்படுகிறார்கள். கிராமங்களில் உள்ள பெரும்பாலான பெற்றோர் பெண் குழந்தைகள் குறித்து அவர்கள் அதிக பட்சமாக கனவு காண்பதே 'நல்லதொரு இடத்தில் கட்டிக் கொடுத்துடணும்'
1098 விழிப்புணர்வு காரணமாக குழந்தை திருமணங்கள் கணிசமாக குறைந்து விட்டன. ஆனாலும் சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது.
பெற்றோரின் மூட நம்பிக்கைகள் கூட பிள்ளைகளின் படிப்பை பாதிக்கின்றன. 'அவனுக்கு கெரகம் சரியில்ல சார் கெடுபிடி காட்டுனா எதாவது பண்ணிக்குவான்னு தான்….'
'அவனோட சாதகத்துல அப்பனுக்கு ஆவாதுன்னு இருக்காம், அதான் கொஞ்சம் எடம் மாத்தி இருக்கட்டுமேன்னு….'
நூறு விழுக்காடு ரிசல்ட்
'இந்த செவுரு இன்னும் எத்தன பேத்த காவு வாங்க போகுதோ…' தனியார் பள்ளிகள் மட்டுமின்றி தற்போது அரசு பள்ளிகளிலும் மெல்லக் கற்கும் மாணவர்கள் 100 விழுக்காட்டிற்கு இடைஞ்சலாக இருப்பார்களோ என்று கட்டம் கட்டப் படுகிறார்கள்.
அதிக வேலை பளு, பாராமுகம், எதிர்மறை தூண்டல் என பல ராஜ தந்திர நடவடிக்கைகள் மூலமாக அவர்களாகவே பள்ளியை விட்டு நின்றுவிடும் சூழலை ஏற்படுத்தி தருகிறார்கள்.
ஆசிரியர் பணி குறித்து சமீபகாலமாக சமூகத்தில் நிலவி வரும் தவறான எண்ணங்களும் கூட மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போக மறைமுக காரணியாக உள்ளது.
ஆசிரியர்கள் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள்
அவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள், அவர்கள் சம்பளம் தண்டம், என்பன போன்ற செய்திகள் அரசியல்வாதிகள் கொளுத்திப்போட்டு தற்போது மாணவர்கள் வரை பரவி நிற்கிறது. இது பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் ஆசிரியர்களின் அறிவுரைகளின் வீரியத்தை மழுங்கடித்து விட்டது.
சமீபத்தில் பள்ளிக்கு வராத மாணவனின் தந்தையை அழைத்தபோது நாங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் வடிவேல் போல 'என்ன கைய புடிச்சி இழுத்தியா' என்கிற ரீதியில் அர்த்தமில்லா எதிர்கேள்விகளால் திணற அடித்து விட்டார்.
தனது மகன் ஒரு பாடத்தில் குறைவான மதிப்பெண் வாங்கி விட்டான் என்று கிராமசபை கூட்டத்தில் 'அந்த ஆசிரியரை மாற்றவில்லை என்றால் பள்ளிக்கு முன் மறியல் செய்வேன்' என்கிறார்.
மற்றுமொரு பெற்றோர் சாதாரண பேச்சு வார்த்தையை எங்களுக்கு தெரியாமல் சாமர்த்தியமாக செய்வதாக நினைத்து மொபைலில் படமெடுத்தார்.
கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ஆசிரியர்களை அசிங்கப்படுத்த முனையும் பொதுமக்கள் பெருவாரியாக இருக்கும் நிலையில் வீட்டுக்குப்போய் வராத மாணவர்களை பேசி அழைத்து வருவதில் தற்போது தயக்கமும் அச்சமும் ஏற்படுகிறது.
EMIS தரவு தளத்தில் இன்னமும் மாணவர்களின் ஜாதகத்தை தான் ஏற்றவில்லை. தினந்தோறும் வரும் திணறடிக்கும் தரவுகள் உள்ளீடு செய்யும் வேலைகள் ஆசிரியர்கள் பணிகளை வெகுவாக பாதிக்கிறது. மாணவர்களின்பால் கவனம் குறைய காரணமாகிவிடுவதால் வராத மாணவர்கள் குறித்து விசாரணை மற்றும் தொடர் செயல்பாடுகளை தொடர முடிவது இல்லை. இந்த பணிச்சுமையும் பாடச்சுமையும் தரும் அழுத்தம் மற்றும் நேரமின்மையால் மாணவர்களிடம் மனம் விட்டு பேசக்கூட ஆசிரியர்களுக்கு நேரமிருப்பது இல்லை. (தரவுகள் உள்ளீடுகளுக்கென்றே ஒன்றியத்திற்கு பத்து நபர்களை பணியமர்த்தலாம்) என்று தெரிவித்து இருக்கிறார்.
இவரது இந்த பதிவு சமூக ஊடகங்களில் தற்போது வைரல் ஆகின்றது. கல்வியாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
Comments
Post a Comment