தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணி: தேர்வு நடத்தப்பட்டு 5 ஆண்டுகளாகியும் நிரப்பப்படாத தமிழ்வழி ஒதுக்கீடு இடங்கள்



தமிழகத்தில் அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பணிகளில் 1,325 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு முதல்முறையாக போட்டித்தேர்வை நடத்தியது.


அத்தேர்வு மூலமாக கடந்த 2019-ம்ஆண்டு ஓவியம், தையல், இசை சிறப்பாசிரியர் காலியிடங்களும், அதைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஆனால், பொது தேர்வுப் பட்டியலுடன் தமிழ்வழி ஒதுக்கீடு தற்காலிக தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்ட நிலையில், சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் காரணமாக அப்பட்டியல் பின்னர் ரத்து செய்யப்பட்டது.


அதைத்தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று பின்னர் அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தன.


இதற்கிடையே, பொதுத் தேர்வு பட்டியலில் ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர் ஆகிய சிறப்பு ஒதுக்கீட்டு காலியிடங்களில் தகுதியான நபர்கள் இல்லாததால் ஏற்பட்ட காலியிடங்கள் அந்தந்த சமூகப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அதற்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 12.10.2021 அன்று வெளியிட்டது. ஒன்றரை ஆண்டு நெருங்கியும் இன்னும் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை.


அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், குறிப்பாகப் பெண்கள் கடந்த 17 மாதங்களாக ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கும், பள்ளிக் கல்வி ஆணையரகத்துக்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர். 'உங்கள் பட்டியல் விரைவில் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுவிடும்' என்று ஒவ்வொரு முறையும் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் கூறி வருவதாக அத்தேர்வர்கள் வேதனையுடன் கூறினர்.


அதேபோல், சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு தேர்வு நடத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்இன்னும் தமிழ்வழி ஒதுக்கீடு இறுதித் தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் தமிழ்வழி ஒதுக்கீடு கோரிய விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.


"நீதிமன்றத்தில் வழக்குகளும் இல்லை. சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலும் கைவசம் உள்ளது. பின்னர் எதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் தமிழ்வழி ஒதுக்கீடு இறுதித் தேர்வு பட்டியலை வெளியிடாமல் காலம் தாழ்த்துகிறது?" என்று தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Comments

Popular posts from this blog