ஊதியம் வழங்குவதில் காலதாமதம் - வேதனையில் பகுதி நேர ஆசிரியர்கள்



தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பாக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


 


கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 5000 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 10,000 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர்.


 ஆனால் 12 ஆண்டுகள் முடிந்த பின்னும்கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. அதுமட்டுமின்றி மாநில அரசு வழங்கிய ஊதிய உயர்வை அலுவலகப் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு, ஆசிரியர்களுக்கு வழங்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் செயல் பெருங்கொடுமையாகும்.



மேலும் இவர்களுக்கு மட்டும் ஆண்டுகளுக்கு 11 மாதம் தான் என்பது போல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை. 


இந்நிலையில், இந்த மாதம் பிறந்து 8 தேதிகளை கடந்தும் இதுநாள் வரை இவர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் வழங்காமல் இருந்து வருகிறது. இவர்கள் வாங்கும் 10 ஆயிரம் ஊதியத்தில் குடும்பம் முழுவதும் உணவு, குழந்தைகள் படிப்பு, மருத்துவ செலவு, வீட்டு வாடகை என இன்னல்களை சந்தித்து வரும் இவர்களுக்கு ஊதியம் உரிய நேரத்தில் வழங்காமல் அரசு அலைக்கழிப்பு செய்வது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. 


மேலும் தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தங்களுக்கான ஊதியத்தினை சரியான நேரத்தில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog