TNPSC: இவர்கள் எல்லாம் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதில் புதிய சிக்கல்!



தமிழக உயர்கல்வித்துறை அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் தேர்வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 58 இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் பாரம்பரியமான பட்டப்படிப்புகளுக்கு இணையானவை அல்ல என்று உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


இதன் மூலம் உயர்கல்வித்துறை குறிப்பிடும் இந்த 58 படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் தமிழக அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளை எழுதுவதில் சிக்கல் ஏற்படலாம்.


உயர்கல்வித் துறையால் நியமிக்கப்பட்ட குழு இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் B.Com in Company Secretaryship படிப்பு வழக்கமான B.Com படிப்புக்கு இணையானது அல்ல. இதேபோல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் M.Sc. in Medical Sociology படிப்பு M.A. Sociology படிப்புக்கு இணையானது அல்ல.


அழகப்பா பல்கலைக்கழகத்தின் M.Com in Company Secretaryship மற்றும் B.Sc (Electronics) ஆகியவை முறையே M.Com மற்றும் B.Sc Physics ஆகிய படிப்புகளுக்கு நிகரானவை அல்ல. பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் M.Sc in Organic Chemistry, M.Sc. Applied Chemistry படிப்புகள் பொதுவான M.Sc. Chemistry படிப்புக்கு ஒப்பானவை அல்ல. 


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் MSWA படிப்பு வழக்கமான MSW படிப்புக்குச் சமமானதல்ல. பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கும் M.Sc in Life Sciences படிப்பு MSc Zoology படிப்புக்கு சமம் அல்ல என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இந்த நடவடிக்கை முற்றிலும் நியாயமற்றது என்றும் மனிதாபிமானமற்றது என்றும் விமர்சனம் செய்யப்படுகிறது. ஆசிரியர் டி.டி.சுந்தரம் கூறுகையில், "நான் பாரதியார் பல்கலைக்கழகத்தில் M.Sc. Applied Chemistry பட்டம் பெற்றேன். பிறகு முனைவர் பட்டமும் பெற்றேன். ஆனால் இப்போது என் படிப்பை அரசுப் பணிகளுக்குச் ஏற்றது அல்ல எனச் சொல்லிவிட்டார்கள். அப்படியானால் என் முனைவர் பட்டத்துக்கு எந்த மதிப்பும் இல்லை." என்கிறார்.


மேலும், "முனைவர் பட்டம் பெற்றாலும் எந்த அரசுக் கல்லூரியிலும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவே முடியாது என்பது நகைப்புக்குரியது. இதனால் அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்த 10 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் தெரிவிக்கிறார்.


"அரசுக் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக ஆகவேண்டும் என்பதுதான் என் வாழ்நாள் கனவு. ஆனால் உயர்கல்வித்துறை ஒரே அறிவிப்பில் என் கனவுகள் அனைத்தையும் தகர்த்துவிட்டது." என்று அரசுப் பணிக்குத் தயாராகும் அருணா விஸ்வநாதன் கவலை தெரிவிக்கிறார்.


உயர்கல்வி அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரித்தபோது, ​முறையான ஆய்வுக்குப் பிறகே முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினர். "சில படிப்புகளை வழக்கமான படிப்புகளுக்கு இணையான படிப்புகள் அல்ல என அறிவிப்பது சகஜம்தான். நிபுணர் குழு அமைக்கப்பட்டு, மிகுந்த கவனத்துடன்தான் பட்டியல் தயாரிக்கப்பட்டது" என்று உயர்கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.


Comments

Popular posts from this blog