TNPSC Group 2: குரூப்-2 குளறுபடி; டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அவசர ஆலோசனை!
குரூப்-2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக, சென்னையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 25ம் தேதி குரூப்-2 முதன்மை தேர்வு நடைபெற்றது. காலையில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும், பிற்பகலில் பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது. இதில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வில் குளறுபடி இருந்தது தெரியவந்தது. ஒருசில தேர்வு மையங்களில் வினாத்தாள்களில் பதிவெண்கள் மாறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வினாத்தாள்கள் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. காலதாமதாக தேர்வு தொடங்கியதால், கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதற்கிடையே சில மையங்களில் வினாக்களை பார்த்த தேர்வர்கள், விடைகளை செல்போன் மற்றும் புத்தகங்களைப் பார்த்து எழுதியதாகப் புகார் எழுந்தது.
இதனால் தேர்வை ரத்து செய்துவிட்டு, மாற்றுத் தேதியில் தேர்வு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்.27) டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ், உறுப்பினர் செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வாணையை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. வருங்காலங்களில் பிரச்சினைகளின்றி தேர்வு நடத்துவது, முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தேர்வுக்கான விடைத்தாள், வினாத்தாள்களைச் சரியாக அனுப்பாத அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments
Post a Comment