ரேஷன் கடை நேரடி நியமனம்: தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் (salesman) மற்றும் கட்டுநர்கள் (Packers) பதவிகளுக்கான நியமன முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்களிடம் பரவலாக காணப்படுகிறது.
முன்னதாக, கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை அந்தந்த மாவட்ட கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையத்தால் வெளியிடப்பட்டது. இந்த பதவிகளுக்கு எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வில் (50:50 மதிப்பெண்கள்) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பபங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணல் தேர்வுக்கு வரவழைக்கப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் நேர்முகத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி தொடங்கியது. திருப்பத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 14ம் தேதியும், திருவள்ளூர், கோயம்பத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 16ம் தேதியும் தொடங்கின. கிட்டத்தட்ட 15 நாட்கள் நேர்காணல் தேர்வு நடைபெற்றன.
அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில், விண்ணப்பதாரரின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக் குழு, தேர்வர்களின் அசல் சான்றிதழ்களின் இரண்டு நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை வாங்கி வைத்துக் கொண்டனர். பின்னர், அன்று மாலையே நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டது. ஓவ்வொரு மையத்திலும், கிட்டத்தட்ட 15 -20 நேர்காணல் அறைகள் அமைக்கப்பட்டு, முன்னாள்/இன்னாள் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் தேர்வை நடத்தினர்.
மாநிலத்தின் அநேக மாவட்டங்களில் நேர்காணல் தேர்வு முடிவுற்ற நிலையில், தேர்வு முடிவுகள் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் அந்தந்த மாவட்ட கூட்டுறவு வேலைவாய்ப்பு நிலையத்தில் வெளியிடப்படும். தெரிவு பட்டியல் குறித்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். முடிவுகள் அறிவிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் உரிய காரணங்களுடன் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
Comments
Post a Comment