"புதிய கல்வி கொள்கை.. அதில் இருக்கும் நல்லதை எடுத்துக்கலாம்.. தப்பில்லை.." அமைச்சர் பொன்முடி பேச்சு



மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து அமைச்சர் பொன்முடி கூறியுள்ள கருத்துகள் கவனம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது.



புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தது. இதற்குத் தமிழ்நாட்டில் இருந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.


இந்தச் சூழலில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் புதிய கல்விக் கொள்கை குறித்துக் கூறியுள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளது.


கல்விக் கொள்கை

 

இந்தியாவில் இன்னுமே ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கல்வி முறை தான் பின்பற்றப்படுவதாகவும் இதனால் மாணவர்களால் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் பெரியளவில் சாதிக்க முடிவதில்லை என்று கூறி பாஜக, புதிய கல்விக் கொள்கையை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இதற்குத் தமிழ்நாட்டில் இருந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.


அமைச்சர் பொன்முடி

 


நவீன குலக்கல்வி திட்டம் என்றும் கூட இதை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்தனர். மேலும், திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டிற்குத் தனியாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கக் குழுவையும் அமைத்திருந்தார். இந்த குழு மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழலில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் பொன்முடி கூறிய கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளது.


தவறில்லை

 


சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவி, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் நல்ல அம்சங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம் அதில் எந்தவொரு தவறும் இல்லை.


தாய்மொழியில் கல்வி

 


நமது தமிழ்நாட்டில் கல்விக் கொள்கைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில், ஆய்வு செய்து புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் நல்ல விஷயங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம். அனைவரும் தங்கள் தாய் மொழியில் கல்வியை கற்ற வேண்டும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் கூறி வருகிறார். இதனை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும்" என்றார்.


சிறப்பானதாக இருக்கும்

 


தொடர்ந்து மாநிலத்தில் கல்விக் கொள்கை குறித்துப் பேசிய அவர், "தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதல்படி மாநிலத்திலும் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களையும் கொண்டதாக மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை சிறப்பானதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.


எப்போது

 


தமிழ்நாடு அரசு அமைத்த வல்லுநர் குழு மாநிலத்திற்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறது. இதன் அறிக்கை இன்னும் சில வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிகிறது. 


சில வாரங்களுக்கு முன்பு இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், "இந்த விஷயத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கும் ஆலோசனைகளை ஏற்று அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுவோம். ஜனவரி இறுதியில் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.. சமர்ப்பிக்க உள்ளோம். அதன் அடிப்படையில் முதல்வர் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பார்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog