புத்தகத்தில் இருந்து வினாக்கள்: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் புத்தகத்தில் இருந்து வினாக்கள் கேட்கவேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்கும் பணியில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் ஈடுபட்டு வருகிறது. புத்தகம் மற்றும் அதற்கு பின் உள்ள வினாக்கள் (புக்பேக் வினா) அடிப்படையில் தேர்வில் வினாக்கள் இடம் பெறும். ஆனால் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட வினாத்தாளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் விடை அளிக்க முடியாத அளவிற்கு 44 வினாக்கள் வரை கேட்கின்றனர்.
எட்டு மதிப்பெண் வினாக்களில் சில கேள்விகள் புத்தகத்திலேயே இல்லாதவையாக உள்ளன. இதனால் மாணவர்கள் சிரமம் அடைகின்றனர்.
தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் எஸ்.சேதுசெல்வம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க வினாக்களை புத்தகத்தில் இருந்து கேட்க வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வி கமிஷனர், தேர்வுத்துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளேன், என்றார்.
Comments
Post a Comment