பொதுப்பிரிவில் 42 வயதை கடந்தவர்கள் இனி ஆசிரியர் பணி நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியாது!



தமிழகத்தில் பொதுப் பிரிவில் 42 வயதை கடந்தவர்கள் இனி ஆசிரியர் பணி நேரடி நியமனங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற விதிமுறை புத்தாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.


ஆசிரியர் பணி நேரடி நியமனங்களில் 42 வயதை கடந்தவர்களுக்கு சிறப்பு நிகழ்வாக தமிழக அரசு வாய்ப்பு வழங்கி வந்தது 2022-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது.


தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனங்கள் மிக முக்கியமான ஒரு வேலைவாய்ப்பாக இருந்து வருகிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த சீனியாரிட்டி படி ஆசிரியர் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டும் இருக்கின்றன. பின்னர் தேர்வு மூலமாக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.


ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை பல லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த ஆசிரியர் தேர்வு முறை மாற்றப்பட்டு பழையபடி சீனியாரிட்டி முறையிலேயே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் இருந்து வருகிறது.


பொதுவாக அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் அனைவரும் நேரடி நியமனங்கள் அடிப்படையிலும் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 50% நேரடி நியமனம்; இதர 50% பதவி உயர்வு என்ற அடிப்படையிலும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1,66,543 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3,14,152 பேர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2,31,501 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியும் பணி கிடைக்காமல் காத்திருக்கின்ற நிலைமையும் உள்ளது.


தமிழகத்தில் முன்னர் ஆசிரியர் பணி நியமனத்துக்கான் வயது வரம்பு 57 ஆக இருந்தது. இது திடீரென 40 ஆகக் குறைக்கப்பட்டது. இந்த வயது குறைப்பானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் ஆசிரியராகவே முடியாது; படித்தது எல்லாம் வீண் எனும் நிலை ஏற்பட்டது. இதனை மாற்ற வேண்டும்- மீண்டும் வயது வரம்பு 57 ஆக மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


இந்நிலையில் கொரோனா பரவல் காலத்தில் தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெறவில்லை. இதனால் அந்த ஆண்டுகளில் ஆசிரியர் பணிக்கான வயதை கடந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.


இதனடிப்படையில் கொரோனா பரவல் கடந்த நிலையில் 2021-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது. அதில், 2022-ம் ஆண்டு வரை சிறப்பு அனுமதியாக, ஆசிரியர் நியமனங்களுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டது; இதர இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 வயதாக உயர்த்தப்பட்டது. இந்த சிறப்பு அனுமதியானது கடந்த 31-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.


இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இனி ஆசிரியர் பணி நேரடி நியமனங்களுக்கு பொதுப் பிரிவில் 42 வயதை எட்டாதவர்கள்; இடஒதுக்கீட்டுப் பிரிவில் 47 வயதை எட்டாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பாகவும் 2021-ம் ஆண்டு செப்டம்பரில் அரசு ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அரசாணையின் படி இப்புதிய நடைமுறை ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது.

Comments

Popular posts from this blog