CBSE 10th 12th Exam: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் புதிய முறை: மத்திய அரசு அறிமுகம்




சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கேள்விகள் எப்படி கேட்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


இதுகுறித்து மக்களவையில் மத்தியக் கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.


கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிவித்தது.


2 பருவத் தேர்வுகள்


புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.



புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டவாறு 2021-22 கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவப் பொதுத்தேர்வு நடைபெற்றது.


பிப்ரவரி மாதத்தில் பொதுத் தேர்வுகள்


பிப்ரவரி 15 முதல் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இந்தத் தேர்வு ஒரே கட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை 34 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 18 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவர். 12ஆம் வகுப்பில் இருந்து 16 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.


 


திறன் அடிப்படையில் தேர்வுகள்


இதுகுறித்து அவர் கூறும்போது, ''தேசிய கல்விக் கொள்கையின்படி சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை சீரமைக்க உள்ளோம். இதற்காக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை திறன் அடிப்படையில் மாற்றி அமைக்க உள்ளோம்.


கொள்குறி வகை, பதிலை உருவாக்கும் வகை, அசர்ஷன் வகை, ரீசனிங் மற்றும் சம்பவத்துக்கு ஏற்ற முடிவு (objective type, constructing response type, assertion and reasoning and case based format) ஆகிய பல்வேறு வடிவங்களில் கேள்விகள் இருக்கும்.


2022- 23ஆம் கல்வி ஆண்டில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோராயமாக 40 சதவீதக் கேள்விகளும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோராயமாக 30 சதவீதக் கேள்விகளும் திறன் அடிப்படையில் அமைய உள்ளன'' என்று அமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog