ஜேஇஇ நுழைவுத் தேர்வு விண்ணப்பம்.. மதிப்பெண்களை குறிப்பிடுவதில் விலக்கு!
ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் அளிக்கப்பட்டு மதிப்பெண்கள் அளிக்கப்படவில்லை. இதனால் ஜேஇஇ நுழைவு தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி), இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி) உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கும் தகுதி பெறுவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு வரும் கல்வியாண்டில் இரு முறை நடத்தப்படவுள்ளது.
ஜனவரி 24ம் தேதி தொடங்கும் முதல் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 15ம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் பல லட்சம் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.
மதிப்பெண்கள் அவசியம்
ஆனால், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இப்போது பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களால் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியது. ஜேஇஇ கூட்டு நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்த மதிப்பெண் எவ்வளவு? மாணவர்கள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு? பெற்ற மதிப்பெண்களின் விழுக்காடு ஆகிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன.
மாணவர்கள் பாதிப்பு
2021ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதனால் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை
இதனால் தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்காத முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 30,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையை தொடர்பு கொள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அரசு தேர்வுகள் இயக்ககம் மூலமாக தேசிய தேர்வு முகாமைக்கு தமிழக தமிழக மாணவர்களுக்கு 10-ம் தேர்வு மதிப்பெண் பதிவிடுவதில் இருந்து தளர்வு அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
தேசிய தேர்வு முகமை விலக்கு
இந்த நிலையில் ஜேஇஇ கூட்டு நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்துள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடாமலேயே தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இது தமிழக மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Comments
Post a Comment