தமிழக கிராம உதவியாளர் தேர்வு; ரிசல்ட் எப்போது? கட் ஆஃப் எப்படி இருக்கும்?
தமிழக கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது?
கட் ஆஃப் எப்படி இருக்கும்? தேர்வு முடிவு எப்போது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு கிராம உதவியாளர் தேர்வு இன்று (டிசம்பர் 4) நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2748 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. இந்த பதவிக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி தான் தகுதி என்பதால், எழுத்து தேர்வு மிகவும் எளிமையான வகையில் நடந்துள்ளது.
அதாவது எழுத்து தேர்வு 1 மணி நேரம் நடைபெற்றது. இதில் முதல் அரைமணி நேரம், அறை கண்காணிப்பாளர்கள் ஒரு கட்டுரையை வாசிக்க, தேர்வர்கள் அதனை எழுத வேண்டும். அடுத்த அரை மணி நேரத்தில் ஆங்கில கட்டுரை வாசிக்கப்பட தேர்வர்கள் அதனை எழுத வேண்டும். இந்தத் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு எழுதப் படிக்க தெரிந்துள்ளதா என்பதை சோதிக்கும் தேர்வாக அமைந்துள்ளது.
இந்த தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் 6 ஆம் தேதி அல்லது இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதியவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனவே அதற்கேற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்தப் பணியிடங்களுக்கு தெரிவு நடைமுறையைப் பொறுத்தவரை, கல்வித் தகுதிக்கு 10 மதிப்பெண்கள், வாகனம் ஓட்டும் திறனுக்கு 10 மதிப்பெண்கள், படிக்கும் மற்றும் எழுத்து திறன் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள், பிறப்பிடம் 25 மதிப்பெண்கள், நேர்காணலுக்கு 15 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைமுறை இருக்கும்.
இதில் தற்போது 40 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றுள்ளது. குறைவான பணியிடங்களுக்கு அதிகமானோர் போட்டியிடுவதாலும், உயர் கல்விப் பயின்ற பலரும் போட்டியிடுவதாலும் கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
Comments
Post a Comment