சிபிஎஸ்இ இணைப்புக்கு புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை சுற்றறிக்கை




புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தமிழக அரசின் பாடதிட்டத்தை பின்பற்றி வரும் நிலையில் சிபிஎஸ்இ இணைப்புக்கு அரசு பள்ளிகளை விண்ணப்பிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



புதுச்சேரி மாநிலத்திற்கென்று தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக அரசின் கல்வி பாடத் திட்டமும், மாஹே பிராந்தியத்தில் கேரளாவின் பாடதிட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர மாநில பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா தேர்வுகட்டுப்பாட்டு துறையின் மூலம் நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. அவை புதுச்சேரி மாநில அரசு வேலைவாய்ப்பகங்களால் அங்கீகரிக்கப்படுகின்றன.


 கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒரு சில அரசுப்பள்ளிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இதையடுத்து, 6ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரைக்கும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் புதுச்சேரி அரசு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்திருந்தார்.


புதுச்சேரி மாநிலத்திலும் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை 6ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்திட புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இந்த கல்வி ஆண்டு முதல், 6ம் வகுப்பில் இருந்து சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கேட்டு, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை, மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பித்துள்ளது.


 மத்திய அரசின் கல்வி வாரியத்தில், சிபிஎஸ்இ இணைப்புக்கான இணையதளம் டிசம்பர் 31 வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் புதுச்சேரி அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகள் சிபிஎஸ்இ இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான ஆவணங்களை டிசம்பர் 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog