13,404 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு: இந்தி, சமஸ்கிருதம் மொழிப்பாடங்களுக்கு மட்டும் விண்ணப்பம்
கேந்த்ரீயா வித்யாலயா பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுவது சர்ச்சையாக உள்ளது.
பணியில் சேர இந்தி மொழியில் புலமைப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியில் ஒன்றிய அரசு நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டுவதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்த்ரீயா வித்யாலயா பள்ளிகளில் முதல்வர் துணை முதல்வர், முதுநிலை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 13,404 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கேந்த்ரீயா வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் இருந்துவரும் நிலையில் புதிய அறிவிப்பில் இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் உள்ளிட்ட வேறு எந்த பிராந்திய மொழிப்பாடங்களுக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அத்துடன் அனைத்து பணியிடங்களுக்குமே இந்தி மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் சர்ச்சையாகி உள்ளது. கேந்த்ரீயா வித்யாலயா பள்ளிகளில் அந்தந்த மாநில மொழிகளை கட்டாயம் பாடம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஆனால் எவ்விதமான எதிர்ப்புகளையும், கோரிக்கைகளையும் பொருட்படுத்தாத ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருவதாக கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment