தமிழகத்தில் குரூப் 1 தேர்வு.. டிஎன்பிஎஸ்சி உத்தேச அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் குரூப் 1 தேர்வு நடைபெறுவதற்கான உத்தேச அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும் நவம்பர் மாதம் முதல்நிலை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கால திட்ட அட்டவணை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வு பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமில்லை. மேலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், 2024ல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தேர்வு திட்டம், தமிழகத்தில் உள்ள குறிப்பாக நடுத்தர மற்றும் கிராமப்புற இளைஞர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை உருவாக்கக் கூடியாதாக உள்ளது. குறிப்பாக, குரூப் 1 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு இருப்பதால், தற்போது 38 வயதில் இருக்கும் பலர் மீண்டும் ஒருமுறை தேர்வெழுதும் வாய்ப்பை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.
2023ஆம் ஆண்டிற்கான அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை (TNPSC Updated Annual Planner) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில், குரூப் 1 தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வு குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் 2023ல் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் குரூப் 1 பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், முதல்நிலைத் தேர்வு 2023, 23 நவம்பர் நடைபெறும் என்றும் , முதன்மைத் தேர்வு 2024 ஜுலை 24ம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2022ம் ஆண்டுக்கான குரூப் 1 நிலை பதவிக்கான அறிவிக்கையை கடந்த ஜுலை மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 92 பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு, கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி நடைபெற்றது. 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1.9 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதன் முடிவுகள், விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் வெளியாகியுள்ள திருத்தப்பட்ட தேர்வு திட்ட அட்டவணையில் குரூப் 2/2ஏ தேர்வு தொடர்பான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. அதேபோன்று, 2023ல் குரூப் 4 தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அதுதொடர்பான அறிவிப்பும் இடம் பெறவில்லை. குரூப் 1 பணியிடங்கள் மட்டுமே கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 2001 முதல் 2006 ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பொருளாதார நிதிநெருக்கடி காரணமாக, குரூப் 1, 2,4 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருந்தது. 2006ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகே, ஆட்சேர்ப்பு நடைமுறை இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது. இந்த நிலையில் இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அட்டவணை அரசு தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருப்பவர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment