உளவியல் உதவி பேராசிரியர் பணிக்காக தேர்வு அறிவிப்பு
மருத்துவ பணிகள் பிரிவில், உளவியல் உதவி பேராசிரியர் மற்றும் கலை, அறிவியல், கல்வியியல் கல்லுாரிகளில் நிதியாளர் பணிக்கான தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக மருத்துவ சேவை பணிகளில் அடங்கிய, உளவியல் மற்றும் மருத்துவ உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணியில், 24 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த தேர்வில் பங்கேற்க, இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை; 60 வயது நிரம்பாமல் இருக்க வேண்டும்.
உளவியலில் எம்.ஏ., - பி.ஏ., - பி.எஸ்சி., ஹானர்ஸ் படிப்பில் ஏதாவது ஒன்று அல்லது கிளினிக்கல் சைக்காலஜி பிரிவில் முதுநிலை டிப்ளமா அல்லது டிப்ளமா படித்திருக்க வேண்டும்.
இந்த பதவிக்கான கணினி வழி போட்டி தேர்வு, மார்ச் 14ல் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், டிச.,14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிதியாளர் பணி
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், நிதியாளர் பணியில் ஐந்து காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வில் பங்கேற்க, இட ஒதுக்கீட்டு பிரிவினர், 37 வயது; பிற பிரிவினர், 32 வயது நிரம்பியிருக்க கூடாது.
இந்த பணிக்கு, பொது நிர்வாகம் என்ற பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பில் முதுநிலை அல்லது எம்.பி.ஏ., நிதி பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான கணினி வழி தேர்வு மார்ச் 10ல் நடத்தப்படுகிறது. தகுதியான பட்டதாரிகள், டிச., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட இரண்டு பதவிகளுக்கும், குறைந்தபட்சம், 56 ஆயிரத்து 100 ரூபாய் முதல், அதிகபட்சம், 2.05 லட்சம் ரூபாய் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
Comments
Post a Comment