நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி எப்போது..?: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!



தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நவம்பர் மூன்றாம் வாரம் முதல் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் ஒன்றியத்துக்கு ஒரு பயிற்சி மையம் என்ற அடிப்படையில் மொத்தம் 412 பயிற்சி மையங்களை ஏற்படுத்தி அதன் மூலம் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அதில், போட்டித் தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 3-வது வார சனிக்கிழமையில் (நவ.19-ம் தேதி) இருந்து, ஒவ்வொரு வார சனிக்கிழமையும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.


போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 11-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 50 பேரும், 11-ம் வகுப்பு மாணவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 20 பேரும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று, தமிழக கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முந்தைய ஆண்டுகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog