2.22 லட்சம் பேர் எழுதிய போலீஸ் எஸ்ஐ தேர்வு முடிவுகள் வெளியீடு




தமிழகம் முழுவதும் 2.22 லட்சம் பேர் எழுதிய போலீஸ் எஸ்.ஐ.தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.


438 பேர் தேர்வாகியுள்ளனர். தமிழக காவல்துறையில் 444 எஸ்ஐ பதவிகள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் சீமா அகர்வால், ஐஜி செந்தில்குமாரி ஆகியோரது தலைமையில் எஸ்பிக்கள் விஜயகுமார், முத்தையா ஆகியோர் தேர்வுக்கான பணிகளை தொடங்கினர்.


கடந்த மார்ச் 8ம் தேதி இதற்கான அறிவிப்புகளை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுக்கு தமிழ் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் காவலர்களாக பணியாற்றிய 13,374 பேர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து எழுத்து தேர்வு ஜூன் 25, 26ல் நடந்தது. தமிழ் தகுதி தேர்வில் 40,313 பேரும், எழுத்து தேர்வில் நேரடியாக கலந்து கொண்டவர்களில் 37ஆயிரத்து 745 பேரும், காவலர்களாக உள்ள 10 ஆயிரத்து 887 பேரும் கலந்து கொள்ளவில்லை. ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 441 பேர் தேர்வு எழுதினர்.


எழுத்து தேர்வுக்கான விடைகளும், தேர்வு முடிவுகளும் இணைய தளத்தில் கடந்த ஜூலை 27ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 2458 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் நேரடியாக தேர்வு எழுதிய 2ஆயிரத்து 5 பேரும், காவலர்களாக உள்ள 453 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.


அதைத் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து நேரடியாக தேர்வில் கலந்து கொண்ட 460 பேர், காவலர்களாக உள்ள 185 பேர் என மொத்தம் 645 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதில் 438 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 


அவர்களில் காவலர்களாக உள்ள 89 பேரும் அடக்கம். அதில் சட்டம் ஒழுங்கு பணியில் 275 ஆண்களும், 42 பெண்கள் என 317 பேரும், ஆயுதப்படைக்கு 32 ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு விரைவில் போலீஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Comments

Popular posts from this blog