SC ST Govt Job: தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாத 10,402 எஸ்சி, எஸ்டி காலியிடங்கள்; விவரம்



தமிழக அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக 10,402 எஸ்சி, எஸ்டி காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்கும் மேலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதை முன்னிட்டு 2021- 22ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் தேர்வு முகாம்கள் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.


எந்தத் துறையில் எவ்வளவு இடங்கள்?


தமிழக அரசுத் துறைகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் (Backlog Vacancies) நிரப்பப்படாமல் உள்ளன. இதில் எஸ்சி காலிப் பணியிடங்கள் 8,173 ஆகவும், எஸ்டி பணியிடங்கள் 2,229 ஆகவும் உள்ளன.


இதில் தமிழக அரசின் உள், மதுவிலக்கு (மற்றும்) ஆயத்தீர்வை துறையில்தான் அதிக அளவிலான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. குறிப்பாக, 7,090 பணியிடங்கள் இந்தத் துறையில் காலியாக உள்ளன. இதில் 6,861 எஸ்சி காலிப் பணியிடங்களும் 229 எஸ்டி காலிப் பணியிடங்களும் அடக்கம்.


அதற்கு அடுத்தபடியாக பள்ளிக் கல்வித்துறையில் 695 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை 446 எஸ்சி பணியிடங்கள் மற்றும் 249 எஸ்டி பணியிடங்களை உள்ளடக்கியதாகும். இதைத் தொடர்ந்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் 478 பின்னடைவுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் எஸ்டி பணியிடங்களே அதிக அளவில் காலியாக உள்ளது. இதில் 173 எஸ்சி பணியிடங்களும் 305 எஸ்டி பணியிடங்களும் அடக்கம். இறுதியாக எரிசக்தி துறையில் 272 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 44 எஸ்சி பணியிடங்களும் 228 எஸ்டி பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.


இவற்றை நிரப்புவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அனைத்துத் துறை செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சேர்ப்புப் பணிகளை விரைவுபடுத்த தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 


கால தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!


இதற்கிடையே தேவையற்ற கால தாமதத்தைத் தவிர்க்கப்பட்டு, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள் தேர்வு மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறும்போது, ''தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படாதது வருத்தமளிக்கிறது!


அரசுத் துறைகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 10,402 பணியிடங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படவில்லை. தேவையற்ற இந்த கால தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!


பட்டியலின, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால், 10,402 குடும்பங்கள் வறுமையில் இருந்தும், சமூக பின்னடைவில் இருந்தும் மீண்டிருக்கும். அதை செய்யத் தவறியது சமூக அநீதி!


பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள் தேர்வு மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி மூலம் அதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog