தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்: ராமதாஸ்
ஒடிசாவை போன்று தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒடிசாவை போன்று தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசா மாநிலத்தின் அரசுத் துறைகளில் ஒப்பந்த பணி முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது; தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வந்த 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா மாநில அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும். இதன்மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் கடைபிடிப்பதற்கான முன்னுதாரணத்தை ஒடிசா உருவாக்கியுள்ளது. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
அதனடிப்படையில் ஒடிசா மாநில அரசுத் துறைகளில் 2013-ஆம் ஆண்டு முதல் பல்வேறு கால கட்டங்களில் தற்காலிக அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்ட அனைத்து பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்வதற்கான அரசாணை ஞாயிற்றுக்கிழமை(அக்.16) பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒடிசா மாநில அரசுத் துறைகளிலும் இனி வரும் காலங்களில் ஒப்பந்த அடிப்படையிலோ, தற்காலிகமாகவோ எவரும் பணியில் சேர்க்கப்பட மாட்டார்கள். தற்காலிக பணியாளர்கள் இல்லாமல் முழுக்க, முழுக்க நிரந்தர பணியாளர்களைக் கொண்டே ஒரு மாநில அரசு இயந்திரம் இயங்குவது பெரும் சாதனையாகும்.
அரசு ஊழியர்களை தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் நியமிப்பது மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். எப்போது பணி நீக்கம் செய்யப்படுவோமோ? என்ற அச்சத்திலேயே ஓர் அரசு ஊழியர் பணி செய்வதை விட கொடுமையான மன உளைச்சல் இருக்க முடியாது. அதேபோல், நிரந்தர பணியாளர்களும், தற்காலிக பணியாளர்களும் ஒரே மாதிரியான பணிகளை செய்யும் போது, நிரந்தர பணியாளர்களுக்கு அதிக ஊதியம், தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் என்பது சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது ஆகும்.
ஆனால், இந்த மன உளைச்சலையும், சமூக அநீதியையும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தற்காலிக ஊழியர்கள் அனுபவித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து அரசுத் துறைகளிலும் தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் நியமனத்தை பின்பற்றி வருகின்றன. தற்காலிக பணியாளர்களில் பெரும்பான்மையினர் ஆசிரியர்கள் என்பது தான் வேதனையான உண்மை.
தற்காலிக பணியாளர்களில் பலரை பணி நீக்க அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவை தீர்மானித்திருப்பதால் அவற்றின் பணியாளர்கள் பெரும் கவலையில் வாடுகின்றனர். இது தான் ஒடிசாவுக்கும், தமிழ்நாட்டிற்குமான வேறுபாடு ஆகும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என அவர்கள் நம்பினர்.
அந்த நம்பிக்கை இன்னும் நிறைவேறவில்லை; அவர்களின் துயரங்களும் தீரவில்லை. தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்வது சாத்தியமற்ற ஒன்றல்ல என்பதை ஒடிசா அரசு நிரூபித்திருக்கிறது. 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதால் அம்மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1300 கோடி மட்டும் தான் கூடுதலாக செலவாகும். தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய ரூ.2,500 கோடி வரை செலவாகக்கூடும்.
ஒரு லட்சம் பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதால் ஏற்படும் சமூக நன்மைகளுடன் ஒப்பிடும் போது ரூ.2500 கோடி கூடுதல் செலவு என்பது பெரிய சுமையல்ல; அது ஆக்கப்பூர்வமான முதலீடு ஆகும். இதற்கு முன் கடந்த 2006-ஆம் ஆண்டில் கருணாநிதி முதல்வராக பதவியேற்றவுடன் மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 45,000 பேரை ஒரே ஆணையில் பணி நிலைப்பு செய்தார்.
அப்போதும் அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தது; ஆனாலும் இந்த நடவடிக்கையால் அரசின் நிதிநிலைமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போதும் தற்காலிக ஊழியர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்வதால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. இதை மனதில் கொண்டு தமிழ்நாட்டிலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்து முதல்வர் ஆணையிட வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
Post a Comment