10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.14 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்
அக்டோபர் 14ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
2021-22-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி நிறைவுபெற்று, தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியானது.
2,25,534 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காதிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர்களுக்கான துணைத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் வெளியானது.
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பள்ளிகள் வாயிலாக மாணவர்கள் பெற்று, மேற்படிப்புகளில் சேர அவற்றைப் பயன்படுத்தினர். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, வரும் அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment