ஆசிரியர் பயிற்சி தேர்வில் 10 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி




பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி தேர்வில் 10 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.



தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இருந்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வினை முதலாம் ஆண்டில் எழுதிய 128 பேரில் 20 மாணவர்களும், 2ஆம் ஆண்டில் 196 மாணவர்களில் 22 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


இதன் மூலம் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 சதவீதம் மட்டுமே தேர்ச்சி என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்து வழங்கி வருகிறது. பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சியும் அளித்து வருகிறது. 


ஆனால் இந்த நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் செப்டம்பர் மாதம் நடைபெற்றத் தேர்வில் முதலாம் ஆண்டில் 20 பேரும், 2ஆம் ஆண்டில் 22 பேரும் என 10 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


மேலும் ஆசிரியர் பட்டயப் பயிற்சியை முடித்தால் வேலை வாய்ப்பு இல்லை என்பதால், அதில் சேரும் மாணவர்கள் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. 


தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்டத் தேர்வில் கலந்துக் கொண்டு தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளது. 2020ம் ஆண்டில் 2075 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 19 பேர் தேர்ச்சி பெற்றனர்.


2021ஆம் ஆண்டில் 1491 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 32 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 2022ஆம் ஆண்டில் 1036 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 65 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி 2ஆம் ஆண்டை 2020ம் ஆண்டில் 2799 பேர் எழுதியதில் 49 பேரும், 2021ஆம் ஆண்டில் 1881 பேர் எழுதியதில் 29 பேரும், 2022ஆம் ஆண்டில் 1222 பேர் எழுதி 48 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆண்டிற்கு நடத்தப்பட்ட தேர்வில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் இருந்து 196 பேர் எழுதி 22 பேரும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 76 பேர் எழுதியதில் 7 பேரும், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 950 பேர் எழுதியதில் 19 பேரும், என 1222 மாணவர்களில் 48 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

Comments

Popular posts from this blog