காலாண்டு தேர்வில் புதிய மாற்றங்கள்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
காலாண்டு தேர்வில் பள்ளியளவில் நடத்திக்கொள்ளலாம் என புதிய மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வுகளை பள்ளிக்கல்வி துறை ஒரே அட்டவணையின் கீழ் நடத்தும். இதற்கான வினாக்களை பள்ளிக்கல்வித்துறை தேர்வு செய்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும். 6 முதல் 12ம் வகுப்புக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கான விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வது வழக்கம்.
இந்நிலையில் காலாண்டு தேர்வுகளை நடத்துவதில் புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளி அளவில் காலாண்டுத் தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் எனவும், பள்ளியளவில் வினாத்தாள் தயாரித்து தேர்வை நடத்திக்கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளலாம் எனவும், செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது, வினாத்தாள் லீக் ஆன நிலையில், புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment