டி.ஆர்.பி., தலைவர் பேச்சுக்கு தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு



ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்திய இணையவழிக் கூட்டத்தில் டி.ஆர்.பி., தலைவர் அதிகார தோரணையில் பேசியதாக தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கல்வித்துறை கமிஷனர் நந்தகுமாருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.


தமிழகம் முழுவதும் செப்.10ல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கிறது. இதுதொடர்பாக மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், கணினி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணி ஒதுக்குவது தொடர்பாக இணையவழிக் கூட்டம் டி.ஆர்.பி., தலைவர் லதா தலைமையில் நடந்தது.அப்போது, பணிபுரியும் மாவட்டத்திலேயே தலைமையாசிரியர், கணினி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணி வழங்க வலியுறுத்தினர்.


 அவர்களிடம், 'நாங்கள் எந்த மாவட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்கிறோமோ அந்த மாவட்டத்தில் தான் பணி செய்ய வேண்டும்' என அதிகார தோரணையில் தலைவர் லதா பேசி, தலைமையாசிரியர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.


இதுகுறித்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் கமிஷனர் நந்தகுமாருக்கு எழுதிய புகாரில், 'டி.ஆர்.பி., நடத்தும் தேர்வுகளில் பணிபுரியும் மாவட்டத்திலேயே தேர்வுப் பணி ஒதுக்க தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். அதை கண்டுகொள்ளாமல் ஆசிரியர்களை அலைக்கழிக்கும் வகையிலும், அதிகார குவியலின் ஒட்டுமொத்த உருவமாகவும் டி.ஆர்.பி., தலைவர் பேசியது கண்டிக்கத்தக்கது.


இது தலைமையாசிரியர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஏற்கெனவே டி.ஆர்.பி.,யின் இதுபோன்ற அணுகுமுறையால் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, கல்வி அதிகாரிகள் வேண்டுகோளால் கைவிடப்பட்டது. மீண்டும் போராட்ட சூழலை ஏற்படுத்திவிட வேண்டாம். பணியாற்றும் மாவட்டத்திலேயே தேர்வுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog