முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தற்காலிக பட்டியலுக்கு தடை கோரிய வழக்கில், எந்த ஒரு பணி நியமனமும் இவ்வழக்கின் இறுதி உத்தரவிற்கு கட்டுப்பட்டதாக அமையும்.
தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சீர்மரபினர் நலச்சங்கம் தலைவர் ஜெபமணி தாக்கல் செய்த மனு:ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு 2021 ல் அறிவிப்பு வெளியிட்டது. தேர்வு 2022 பிப்ரவரியில் நடந்தது. தேர்வு முடிவு ஜூலை 4 ல் வெளியானது.மிக பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது.
அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. முதுகலை ஆசிரியர் தேர்வு நடைமுறையில் மிக பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கான உள் ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இதில் விதிமீறல் உள்ளது.
இதனால் மிக பிற்பட்டோரில் இதர பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து தேர்வானோரின் தற்காலிக பட்டியல் வெளியாகியுள்ளது. அதற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ஜெபமணி குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: எந்த ஒரு பணி நியமனமும் இவ்வழக்கின் இறுதி உத்தரவிற்கு கட்டுப்பட்டதாக அமையும். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், டி.ஆர்.பி.,தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி செப்.,27 க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
Comments
Post a Comment