`நீட் தேர்ச்சி விகிதம் குறைய காரணம் என்ன?!' - அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன விளக்கம்
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதியில் தீர்க்க வேண்டிய முக்கியப் பிரச்னைகளை, மாவட்ட ஆட்சியர்களிடம் மனுவாக வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பிரச்னைகளை அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ``இலவசத் திட்டங்கள் என்பவை சமூகநீதிக்குத் தொடர்புடையவை. சமூகநீதி அடிப்படையில், அனைவருக்கும் சமமாக அனைத்தும் கிடைக்கவே இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இரண்டு ஆண்டுகள் இந்த கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுமா என்ற கேள்வி இருந்தது. இன்றைக்கு அதைத் தாண்டி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படித்துவருகின்றனர். மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்ட காலத்தைத் தற்போதுதான் உடைத்திருக்கிறோம். மாணவர்கள் தற்போதுதான் பள்ளிச் சூழலுக்கு மீண்டும் தயாராகிவருகிறார்கள். ஆகவே, நீட் தேர்ச்சி சதவிகிதம் குறித்து இந்தக் காரணத்தையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நீட் தேர்வே கூடாது என்பதற்காக நாம் சட்டப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தாலும், அது வரைக்கும் நம்முடைய குழந்தைகளுக்கு அதற்கான பயிற்சியைக் கொடுக்கவேண்டியது பள்ளிக்கல்வித்துறையின் கடமை. மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும்.
அதேநேரத்தில் தன்னம்பிக்கையை மாணவர்கள் இழந்துவிடக் கூடாது. மாணவர்கள் தவறாக முடிவெடுப்பது சம்பந்தமான செய்திகளைப் பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது. நீட் தேர்வு ரிசல்ட் வெளியான அன்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பதைப்போல இருந்தேன். குழந்தைகளுக்கு எவ்வளவு தன்னம்பிக்கையைக் கொடுத்தாலும், ஏதாவது ஒரு தவறான முடிவை எடுத்துவிடுவார்களோ என பயமாக இருக்கிறது. தயவுசெய்து மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது போன்ற செயலைச் செய்யக் கூடாது. அது பெற்றோரையும் சமூகத்தில் தேவையில்லாத கவலையில் ஆழ்த்திவிடும்.
நீட் தேர்வு விலக்கு குறித்து சட்டமன்றத்தில் கட்சி வேறுபாட்டைக் கடந்து தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். சமீபத்தில் கேரளாவுக்கு வந்திருந்த அமித் ஷாவிடம்கூட நீட் தேர்வு விலக்கு குறித்து வலியுறுத்தியிருக்கிறோம்.
நாடாளுமன்றம் கூடும்போதெல்லாம், நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்துப் பேசிவருகின்றனர். நல்ல தீர்வு வருமென்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பள்ளி வளாகத்தைச் சுற்றி போதைப்பொருள்கள் கிடைக்காமல் இருக்க தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம். அப்படி யாரேனும் போதைப்பொருள்களை விற்றால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Comments
Post a Comment