பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலரை பங்கேற்க வைக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களில் இல்லம் தேடிக் கல்வி மையத்தின் தன்னார்வலர்களை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் தேர்வு செய்யப்படும் பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுபுதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
உறுப்பினர்கள் தங்கள் சுய விருப்பம், எதிர்பாராத சூழல்கள் உட்பட பல்வேறு காரணங்களால் எஸ்எம்சி பணியில் தொடர முடியாத நிலையில் தீர்மானம் இயற்றி அவரை பொறுப்பில் இருந்து விலக்கி கொள்ளலாம்.
இதையடுத்து அவருக்கு பதிலாக புதிய உறுப்பினரை குறைந்தபட்சம் 50 சதவீத பெற்றோரை கொண்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேர்வு செய்ய வேண்டும்.
இதேபோல், தலைவர் உட்படஇதர நிர்வாகிகளையும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு குழுவில்உறுப்பினராக இல்லாத இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்கள் 3 பேரை சுழற்சி முறையில் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க வேண்டும்.
அப்போது அவர்கள் சார்ந்த மையங்கள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ள கூட்டத்தில் 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் வருகைப் பதிவை தலைவர் மட்டுமே செயலியில் பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment