அரசு பள்ளிகளில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிக்கல்
அரசு பள்ளிகளில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2300-க்கும் அதிகமான அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கொரொனோ காரணமாக 2 ஆண்டுகள் பள்ளிகள் செயல்படாத சூழலில் தற்போது வழக்கமான வகுப்புகள் செயல்பட துவங்கி உள்ளது. இந்நிலையில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்துவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது.
மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வது எப்படி என கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 3000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. தற்போது காலி பணியிடங்கள் எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்துள்ளது. . குறிப்பாக, வட மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளன.
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆசிரியர்களை நியமணம் செய்யும் பணிகளில் காலதாமதம் ஏற்ப்பட்டுள்ளது . இந்த பணிகளை விரைவுபடுத்தி போர்க்கால அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்தால் மட்டுமே ஓரளவேனும் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த முடியும் என்பதே எதார்த்த நிலையாக உள்ளது.
Comments
Post a Comment