குரூப் 4 தேர்வு மையம் செய்த குளறுபடி, பல ஆண்டு காலமாக காத்திருந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறி?
தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7382 பணியிடங்களை நிரப்ப TNPSC Group 4 தேர்வு நடத்தப்பட்டது.
கடைசியாக கடந்த 2019 ம் ஆண்டு தான் குருப் 4 தேர்வு நடைப்பெற்றது. 3 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடைபெற்றதால் அதிகப்படியானோர் விண்ணப்பித்தனர். கடந்த 2019 ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஐந்து லட்சம் நபர்கள் பேர் கூடுதலாக விண்ணப்பித்து இருந்தனர்.
வி.ஏ.ஒ, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான இந்த தேர்வை எழுத 22லட்சம் நபர்கள் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த மாதம் ஜூலை24 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் குருப் 4 தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில் சென்னை அடுத்த பூந்தமல்லி - ஆவடி பிரதான சாலையில் அமைந்து உள்ள SUDHARSANAM VIDYAASHRAM (CBSE) SCHOOL பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்வு மையத்தில் நடத்த குளறுபடிகள் குறித்துதான் நாம் இங்கு விரிவாக பார்க்க போகிறோம். இது குறித்து தேர்வு எழுதிய ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது,
தேர்வு எழுத காலை 8. 30 மணிக்கு தேர்வு மைய வளாகத்திற்குள் சென்றோம். அங்கு இருந்த தகவல் பலகையில் தேர்வு அறை குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டு இருந்தது. ஏற்கனவே ஹால்டிக்கட்டில் ஹால் நம்பர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இருந்த போதிலும் தகவல்பலகையில் ஒட்டப்பட்டு இருந்ததை ஒருமுறை சரிபார்க்கலாம் என நினைத்து அங்கு சென்று பார்த்தால், என்னுடைய பதிவெண்ணுக்கு வேறு ஒரு ஹால் நம்பர் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதாவது என்னுடைய ஹால்டிக்கட்டில் Hall No: 019 என இருந்தது. ஆனால் அந்த பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ள தகவல் பலகையில் Hall No: 021 என குறிப்பிடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அதை தொடர்ந்து அந்த பள்ளியை சார்ந்த ஒருவர், எல்லாரையும் ஒன்று கூட சொல்லி சில விதிமுறைகளை சொன்னார்கள். அதாவது, தேர்வு அறைக்குள் யாரும் கைகடிகாரம், பர்ஸ் உள்ளிட்ட எந்த பொருளையும் உடன் எடுத்து செல்ல கூடாது. தகவல் பலகையில் ஒட்டப்பட்டு அறை எண் படி அவரவர் அறைக்கு செல்லவும் அன்று மைக்கில் தெரிவித்தார்.
காலை 09.00 மணிக்கு தேர்வறைக்குள் சென்று அமர்ந்தோம். ஒரு அறைக்கு 20 பேர் வீதம் அமரவைக்கப்பட்டனர்.
பின், 09.30 மணிக்கு அனைவருக்கும் OMR சீட் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து கேள்வி தாள்(வினாதொகுப்பும் ) வழங்கப்பட்டது. வினா தொகுப்பு சீல் வைக்கப்பட்டு இருந்தது. சீலிடப்பட்டு இருந்த வினா தொகுப்பை ஓபன் செய்ய வேண்டாம் என்றும் அதற்கு முன் பதிவெண்ணை வினா தொகுப்பிலும், வினா எண்ணை OMR சீட்டிலும் நிரப்ப வேண்டும் என்றும் கூறினார்கள்.
அதன் படி வினாதொகுப்பு எண்ணை அவரவர்களின் OMR சீட்டில் நிரப்பினோம். வினாதொகுப்பை யாரும் ஓபன் செய்ய கூடாது.. நாங்கள் சொல்லும் வரை அமைதியாக இருங்கள் என்றார்கள். திடிரென அங்கு வந்த ஒருவர் வினா தொகுப்பினை அனைவரிடத்திலும் இருந்து திரும்ப பெறுங்கள் என்றார். எங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை. எதற்காக வினா தொகுப்பினை திருப்பி கொடுக்க வேண்டும் என்று எண்ணி கொண்டு இருக்கும் போதே வினா தொகுப்பினை எங்கள் அறை கண்காணிப்பாளர் திரும்ப பெற்று கொண்டு இருந்தார்.
ஒரு சிலர் மட்டும் எதற்காக வினா தொகுப்பினை திரும்ப பெறுகிறீர்கள். வினா தொகுப்பு எண்ணை OMR சீட்டில் நிரப்பி விட்டோம். இந்த நேரத்தில் திரும்ப பெறுவது சரியா என கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு, அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை முதலில் வினா தொகுப்பினை திரும்ப தாருங்கள் என்று சொல்லிக்கொண்டே அனைவரிடத்திலும் உள்ள வினா தொகுப்பினை வாங்கி கொண்டனர்.
சில நேரம் கழித்து அதாவது 09.50 இருக்கும் இன்னொரு வினாத்தாளை கொண்டு வந்து அனைவரிடத்திலும் வழங்கினார்கள். அதை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். எதற்காக வேறொரு வினா தொகுப்பினை வழங்கி இருக்கிறீர்கள். அதிலும் இரண்டாவதாக கொடுக்கப்பட்ட வினா தொகுப்பின் சீல் ஓபன் செய்யப்பட்டு இருந்தது. பொதுவாகவே சீல் ஓபன் செய்வதற்கு முன்பாகவே பதிவு எண்ணை, வினா தொகுப்பில் எழுதி இருக்க வேண்டும். ஆனால், அந்த வினா தொகுப்பில் எந்த பதிவெண்ணும் எழுதபடவில்லை ஆனால் சீல் ஒப்பன் செய்யப்பட்டு இருந்தது.
நாங்கள், தேர்வெழுத ஒப்பு கொள்ளவில்லை. OMR சீட்டில் என்ன வினாத்தாள் எண்ணை குறிப்பிட்டு உள்ளோமோ அதே எண் கொண்ட வினா தொகுப்பினை தந்தாள் மட்டுமே தேர்வை எழுதுவோம் என்றோம். இல்லை இல்லை நீங்கள் எழுத ஆரம்பியுங்கள் என்றார் தேர்வு அறை கண்காணிப்பாளர்.
அவர்கள் எவ்வளவு சொல்லியும் நாங்கள் யாரும் தேர்வெழுத ஆரம்பிக்கவில்லை. பள்ளி முதல்வரை வர சொல்லுங்கள் என்றோம். பின் 10.15 மணிக்கு அப்பள்ளியின் முதல்வர் உள்பட தேர்வை நடத்தும் முக்கிய ஆசிரியர்கள் 5 பேர் வந்து எங்களிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அவர்களுடம் நாங்கள் இரண்டு கோரிக்கை வைத்தோம். அதாவது, வினா தொகுப்பு எண்ணை ஏற்கனவே OMR சீட்டில் நிரப்பி விட்டோம். அதனால் அதே வினாதொகுப்பை மீண்டும் எங்களுக்கு தாருங்கள். இல்லையென்றால் புதிய OMR சீட்டை வழங்குங்கள் என்றோம். இதில் எதாவது ஒன்றை செய்தால் மட்டுமே தேர்வு எழுதுவோம் என்றோம்.
அனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. மாறாக, நடந்தது தவறு தான், நாங்கள் TNPSC அதிகாரியிடம் இதுகுறித்து போனில் பேசிவிட்டோம். அதனால் நீங்கள் பயபடாமல் தேர்வு எழுதுங்கள் என்றார்கள். எவ்வளவு பேசியும் அவர்கள் நாங்கள் சொன்னதை ஏற்கவில்லை.
போனில் பேசியதை எல்லாம் எப்படி நாங்கள் எடுத்து கொள்ள முடியும்.. முறையான அதிகாரபூர்வ மின்னஞ்சல் மூலம் அனுமதி கடிதம் உள்ளதா என கேள்வி எழுப்பினோம். அவர்கள் எதற்கும் பதில் தர தயராக இல்லை. அவர்களிடம் இருந்து வந்தது எல்லாம் அலட்சியமான பதில் தான்.
பின் OMR சீட்டில் ஏற்கனவே எழுதி இருந்த எண்ணை அடித்து விட்டு இரண்டாவதாக கொடுக்கப்பட்ட வினா தொகுப்பு எண்ணை எழுத சொன்னார்கள். அதன்படி விருப்பமே இல்லாமல் அவர்கள் சொன்ன மாதிரி வினா தொகுப்பு எண்ணை அடித்து திருத்தி தேர்வு எழுதினோம்.
தேர்வெழுத நாங்கள் தொடங்கிய போதும் நேரம் சரியாக 10. 20 மணி ஆகி விட்டது. யாருக்குமே தேர்வெழுத விருப்பமே இல்லை. அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கபட்டோம். இதன் நடுவே எங்கள் பெயரையும், பதிவு எண்ணையும் ஒரு நோட்டில் எழுதி கொண்டார்கள்..எதற்காக என தெரியவில்லை.
குறிப்பு : வினா தொகுப்பின் முதல் பக்கத்தில் சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் எட்டாவதாக குறிப்பிட்டு உள்ளதாவது, "வினா தொகுப்பு எண்ணை தவறுதலாக குறிப்பிட்டு இருந்தால் உங்களுடைய விடைத்தாள் செல்லாததாக்கப்படும்" என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இவ்வாறு தேர்வெழுதியவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு வேலைக்கு ஆள் எடுக்க தேர்வை நடத்தும் TNPSC யில் இது போன்று நடத்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
தேர்வு மையத்தின் இத்தைகைய செயலால் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என தெரிவில்லை.
சம்மந்தப்பட்ட தேர்வு மையத்தின் மீது TNPSC நிர்வாகம் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பாப்போம். இதுகுறித்து TNPSC விளக்கம் தருமா? பொறுத்து இருப்போம்.
Comments
Post a Comment