பள்ளிகளில் ஆசிரியரை நியமிக்க புதிய முறை!
தமிழ்நாட்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில் பி.எட் மற்றும் எம்.எட் படிக்கும் மாணவர்களுக்கான 80 நாட்கள் பயிற்சியின்போது ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் பணிபுரிய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் மாணவர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி அளிக்கப்படுகிறது. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பிஎட் பட்டப்படிப்பும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடம் நடத்துவதற்கு எம்எட் பட்டப்படிப்பும் படித்திருக்க வேண்டும். பி.எட் மற்றும் எம்எட், பிஎச்டி பட்டப்படிப்புகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. ஆசிரியர் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட நாட்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது.
அதன் அடிப்படையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் கல்வியியல் நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களின் அனுமதி பெற்று அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி பயிற்சி பெற்று வந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பாண்டில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த உத்தரவின் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பள்ளிகளில் நியமிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. பள்ளிக்கல்வித்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் 24 மாவட்டங்களில் 2,200 பேர் மட்டுமே பணியில் சேர்ந்தனர். பத்தாயிரத்திற்கு மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளன.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், பி.எட் மற்றும் எம்எட் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சிக்காக சுமார் 80 நாட்கள் அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். இப்பயிற்சி மாணவர்களுக்கு பள்ளி உதவி கிட்டை அந்தந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் செய்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டு முதல் இந்த ஒதுக்கீடு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுடன் பள்ளிக்கல்வித்துறையால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரடியாக ஒதுக்கீடு செய்யப்படும்.
எனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் எந்த ஒதுக்கீடு செய்ய வேண்டியது இல்லை. மேலும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் கல்லூரிகளுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால் அவர்கள் அதை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகத்திடம் நேரடியாக கொண்டு செல்லலாம். ஒவ்வொரு பள்ளிக்கும் செல்ல வேண்டிய மாணவர்கள் எண்ணிக்கை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கு எந்தெந்த மாணவர்களை அனுப்பலாம் என்பதை கல்லூரிகளே முடிவு செய்யும்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தை தவிர பிற தன்னாட்சிக் கல்லூரியில் மட்டும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று பயிற்சி மேற்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. எந்தவித பயிற்சியும் மேற்கொள்ளாமல் பட்டப் படிப்பினை முடித்த மாணவர்கள் நேரடியாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு இவர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் வகுப்புகளில் ஆசிரியர்கள் இருக்கும் சூழ்நிலை ஏற்படும். ஆசிரியர் பயிற்சிக்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்கனவே நடைபெற்ற முறைகேடுகளை களைவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment