TNPSC, சீரூடைப் பணியாளர் தேர்வுகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், தமிழ்வழி இடஒதுக்கீடு என்பது முறையாக பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஏற்படும் சமவாய்ப்பின்மையை நீக்குவதற்காக, மாநில அரசு பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க, 2010-ஆம் ஆண்டில் தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்நிலையில், தமிழ்வழி இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது.
அதில், அரசு பணிகளில் இடஒதுக்கீட்டைப் பெற, ஒன்றாம் வகுப்பு முதல் தகுதிப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும், தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் அரசின் உதவித்தொகையை பெற்றிருப்பார்கள். எனவே, அந்த சான்றிதழை டிஎன்பிஎஸ்சி பெற்று இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியது.
ஆனால், தேர்வர்களின் சந்தேகங்களை விளக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட "Frequently asked questions" என்ற ஆவணத்தில், உதவித்தொகை சான்றிதழை சமர்ப்பிக்கத் தேவையில்லை என குறிப்பிட்டது. மேலும், முதல் பட்டப்படிப்பை ஆங்கிலவழியில் படித்துவிட்டு, இரண்டாவது பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்வி மூலம் தமிழ்வழியில் படித்திருந்தாலும், தமிழ்வழி இடஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியது.
அதேநேரத்தில், ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதில், பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, முதல் இளநிலை பட்டத்தை தமிழ்வழியில் பயின்று பெற்றிருக்க வேண்டும் எனக் குறிபிட்டுள்ளது.
தமிழ்வழி இடஒதுக்கீட்டை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக நீதிமன்றம் ஓர் உத்தரவை வெளியிட்டுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி-யின் நிலைப்பாடு மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் நிலைப்பாடு ஆகியவற்றுக்குள் இருக்கும் முரண்கள் குழப்பமடையச் செய்வதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.
நீதிமன்ற வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றி, 20 சதவீத இடஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவேறும் வகையில், விதிமுறைகளை டி.என்.பி.எஸ்.சி மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை மாற்றி அமைக்க வேண்டும் என்று துறைசார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment