TNPSC Group 4 Exam: மைனஸ் மார்க் அபாயம். தேர்வு அறையில் இந்த 3 முக்கிய விஷயங்களை மறக்காதீங்க!
TNPSC group 4 exam minus mark to these mistakes details here: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் பலருக்கும் தெரியாத விஷயம், இந்த தேர்வில் மைனஸ் மார்க் உண்டு என்பது .
எது எதற்கெல்லாம் மதிப்பெண்கள் மைனஸ் செய்யப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. ஆனால், தேர்வர்கள் கீழ்கண்ட தவறுகளைச் செய்தால் அவர்களுக்கு மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்பே பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால் பயன்படுத்தும் முன்பே மாற்றிக்கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக வேறு விடைத்தாள் பெற்று அதில் தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதி இருந்தால் தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.
மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை 'ஷேடிங்' செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால் இரண்டு மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
வினா தொகுப்பு புத்தகத்தின், அதாவது வினாத்தாள் எண்ணை சரியாக குறிப்பிடாமலும் விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக மையிட்டு நிரப்பாமல் இருந்தாலும் 5 மதிப்பெண் கழிக்கப்படும்.
விரல் ரேகை வைக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற தேர்வர்கள் தேவைப்படும் இடத்தில் விரல் ரேகை வைக்க வேண்டும். ரேகை வைக்காவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.
எந்த கேள்விக்காவது விடைக்குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் 2 மதிப்பெண் கழிக்கப்படும். தேர்வர்கள் கவனமாக விடைத்தாளை கையாள வேண்டும்,' என்று கூறப்பட்டுள்ளது.
இதைத்தவிர தேர்வர்கள் செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இப்போது பார்ப்போம். விடைத்தாள் அதாவது ஓ.எம்.ஆர் தாளில் எந்தெந்த இடங்களில் எல்லாம் நீங்கள் கையொப்பம் இட வேண்டுமோ, அங்கெல்லாம் சரியாக கையொப்பமிட்டுக் கொள்ளுங்கள். அதேபோல், அறை கண்காணிப்பாளர் கையொப்பம் ஓ.எம்.ஆர் தாள் மற்றும் ஹால் டிக்கெட்டில் இடப்பட்டிருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஓ.எம்.ஆர் தாளில் விடைகளைக் குறிப்பதில் கவனமுடன் செயல்படுங்கள். சில கேள்விகளுக்கு பின்னர் விடையளிக்கலாம் என விட்டுவிட்டு சென்றிருப்பீர்கள். அவற்றிற்கு விடையளிக்கும்போது, சரியான வினா எண்ணுக்கு விடையளிக்கிறோமா என்பதை உறுதி செய்த பின்னர் விடையளியுங்கள்.
தற்போது குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் மேற்கண்ட தகவல்களை கவனமாக படித்து, தேர்வில் இந்த தவறுகளை செய்யாமல், நீங்கள் விடையளித்த வினாக்களுக்கு முழுமையான மதிப்பெண்களை பெற்று, அரசு அதிகாரியாகுங்கள்.
Comments
Post a Comment