தற்காலிக ஆசிரியர் நியமனம் எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பர்வதம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில், பள்ளியின் அருகில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு முரணானது. குறிப்பாக இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. எனவே, தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், மேல் நடவடிக்கைகளை தொடர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகர், தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான முந்தைய வழக்குகளில் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவுகளை, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Comments
Post a Comment