தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்: உயர் நீதிமன்ற உத்தரவால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் டெட் தேர்ச்சியாளர்கள்
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு, நேற்று முதல் இணையம் வழியாகவோ அல்லது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலோ அல்லது மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம்' என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதையடுத்து நேற்று முதல் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் திருச்சி, லால்குடி, முசிறி உள்ளிட்ட மாவட்டக் கல்வி அலுவலங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க ஏராளமான ஆசிரியர்கள் குவிந்தனர்.
ஆனால், அங்குள்ள அலுவலர்கள் அவர்களது விண்ணப்பங்களை ஏற்கவில்லை. மாறாக, 'தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருப்பதால், திருச்சி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் சார்ந்த எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை' என்ற அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை மட்டும் சுட்டிக்காட்டினர்.
இதனால் குழப்பம் அடைந்த ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்களிடம் விசாரித்த போது, 'மதுரை கிளை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வரும் திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், திருச்சியில் வரும் ஜூலை, 8ம் தேதி ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுவதால், அப்போது ஏற்படும் காலிப் பணியிடங்களையும் கணக்கில் கொண்டு, ஆசிரியர் பணி நியமனங்களை மேற்கொள்ள இருப்பதாக' தெரிவித்தனர்.
இதனால் ஆர்வமுடன் விண்ணப்பிக்க வந்த 'டெட்' தேர்வு தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இவர்களில், மாற்றுத்திறனாளிகளும், கர்ப்பிணிப் பெண்களும், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்களும் அடக்கம்.
Comments
Post a Comment