பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வு வழக்கு: அரசு தரப்பில் தகவல் வேண்டும் - நீதிமன்றம்





அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கில், வழக்கு குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


திண்டுக்கலைச் சேர்ந்த தண்டபாணி, மதுரையை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோர் உயர்நீதிமன்றமதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாங்கள் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பின் பிஎஸ்சி கணிதம், எம்எஸ்சி கணிதம் ஆகிய படிப்புகளை தமிழ் வழியில் கல்வி கற்றோம். கடந்த 2019 நவம்பர் 29ஆம் தேதி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் வேலைக்கான 1060 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பணிக்காக தமிழ் வழி இட ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்தேன். பின் தேர்வு நடைபெற்றது. பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பு 2022, ஜூலை 8ஆம் தேதி வெளியானது. அதில் எனது பெயர் இடம் பெறவில்லை. நான் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு முறையாக தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படாததே காரணம். முறையாக 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரியில் நேரடியாக சென்று தமிழ் வழி பயின்று இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு தேர்வு செய்யப்படாமல் கல்லூரியில் மட்டும் தமிழ் வழியில் பயின்றவர்கள், தொலைநிலைக் கல்வியியல் தமிழ் வழியில் பயின்றவர்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் பணிகாக ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்காக, ஜூலை 8, 2022 அன்று வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, முறையாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீடு செய்து பின் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், வழக்கு குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்கவும், இது சம்பந்தப்பட்ட வழக்குகளுடன் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Comments

Popular posts from this blog