தமிழ் மொழி கட்டாயமில்லை என்பதால் சான்றிதழ் சரிப்பார்ப்பில் குவிந்த வெளிமாநிலத்தவர்கள்



பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.



பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 16,17,18 ஆகியத் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.


அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2021 டிசம்பர் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் கல்வித்தகுதி சான்றிதழ்,பணி அனுபவம் சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை 2022 மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.


பாலிடெக்னிக் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் அடிப்படையில் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, 15 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பணியிடத்திற்கு 2 பேர் என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.


ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2,148 நபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் TNPSC நடத்தும் தேர்வில் உள்ளது போல தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.


இதன் காரணமாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர். இதில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு தமிழ்நாட்டில் பணியில் சேரக்கூடிய வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog