பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து!
வேலைவாய்ப்பு பதிவுகள் இனி பள்ளிகளில் செய்யப்பட மாட்டாது என்று வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது, அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்தாண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் என வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்பவர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaaippu.gov.in என்ற முகவரியில் நேரடியாக மாணவர்களே பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment