மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான 'இன்ஸ்பயர்' விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான மத்திய அரசின் 'இன்ஸ்பயர்' விருதுக்கு, தகுதியான பள்ளி மாணவர்களின் பெயரை செப்.30-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை சார்பில் ஆண்டுதோறும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் விருதுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
எனவே, 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் செப்.30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வகுப்புக்கு 5 பேரையும், நடுநிலைப் பள்ளிகளில் 3 பேரையும் பதிவு செய்யலாம். அதிகப்படியான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.10,000 செலுத்தப்படும். எனவே, வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்யும்போது, மாணவர்கள் பெயரிலான தனி கணக்காக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment