பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்.. தமிழக முதல்வருக்கு முக்கிய கோரிக்கை..!!!
பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தமிழக முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களை மூப்பு அடிப்படையில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழு கடந்த 2012-ம் ஆண்டு பகுதி நேர ஆசிரியர்களாக தேர்ந்தெடுத்தனர். இந்த ஆசிரியர்கள் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு பாடங்களை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட 16,549 ஆசிரியர்களுக்கும் ரூபாய் 5000 மாதந்தோறும் சம்பளமாக வழங்கப்பட்டது.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் ரூபாய் 10,000 சம்பளமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் ஆணையானது பிறப்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் 100 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் மட்டுமே சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையை மாற்றி ஒரு பள்ளிக்கு ஒரு சிறப்பாசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது தொடர்பாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு எழுதி அனுப்பியுள்ளனர்.
Comments
Post a Comment