பள்ளி கல்வி வளாகத்தில் பாடை கட்டி ஒப்பாரி
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து, பள்ளிக்கல்வி துறை கமிஷனரக வளாகத்தில் பட்டதாரிகள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை உருவாக்காமல் தற்காலிகமாக 13 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிகளுக்கு கமிஷனரகம் உத்தரவிட்டது. இதற்கு எந்த வழிமுறையும் அறிவிக்கப்படவில்லை. மேலும் அரசியல்வாதிகள் உறுப்பினராக உள்ள பள்ளி மேலாண்மை குழு வழியே ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த குளறுபடியான அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், நேற்று மூன்றாம் நாளாக சென்னையில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது பட்டதாரிகள் தங்களுக்கு படித்த படிப்புக்கும் எழுதிய தகுதி தேர்வுக்கும் வேலை கிடைக்காமல் உள்ளதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், குற்றம் சாட்டினர்.
இதை அரசுக்கு எடுத்துக்காட்டும் வகையில் பிணம் போல் படுத்தும், பாடை கட்டியும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். 'தமிழக அரசு, தற்காலிக ஆசிரியர் நியமனத்தை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்; காலமுறை ஊதியத்தில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்' என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment