7,301 இடங்களுக்கு நாளை குரூப்-4 தேர்வு: 22 லட்சம் பேர் பங்கேற்க அனுமதி
தமிழக அரசு துறைகளில், 7,301 காலி இடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வு நாளை, 7,689 மையங்களில் நடக்கிறது.
தேர்வில் பங்கேற்க 22 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியாளர் தேர்வு வாரியமான டி.என்.பி.எஸ்.சி., நாளை நடத்தும் தேர்வின் வழியே, கிராம நிர்வாக அலுவலர் 274; இளநிலை உதவியாளர் 3,593, தட்டச்சர் 2,108; சுருக்கெழுத்தர் 1,024 உள்ளிட்ட, 7301 இடங்கள், இந்த தேர்வின் வழியே நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு மாநிலம் முழுதும், 7,689 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கு, 12.67 லட்சம் பெண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர், 6,635 முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட, 22 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டுள்ளனர். சென்னையில், 503 மையங்களில், 1.56 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.
மதிப்பெண் முறை?
தேர்வில், 10ம் வகுப்பு தரத்தில் மொத்தம், 300 மதிப்பெண்களுக்கு வினா தொகுப்பு புத்தகம் வழங்கப்படும். அதில், கட்டாய தமிழ் மொழி தகுதி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெறும்.பொதுப் படிப்புகள் பிரிவில் 75, திறனறிதல் பிரிவில் 25 கேள்விகள் என, 150 மதிப்பெண்களுக்கு, 100 கேள்விகள் இடம் பெறும்.அனைத்திலும் சேர்த்து குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, தேர்ச்சி பட்டியலில் தேர்வர்கள் இடம் பெறுவர்.
l குரூப் - 4 தேர்வு காலை 9:30 மணிக்கு துவங்கி 12:30 மணிக்கு முடியும். அதிகபட்சம் காலை 9:00 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்l தேர்வர்கள் முக கவசம் அணிந்து வருவது கட்டாயம். ஹால் டிக்கெட்டை, எந்த வகையான பிரதி எடுத்து வந்தாலும் ஏற்கப்படும். ஆனால், அதில் உள்ள விபரங்கள் தெளிவாக தெரிய வேண்டும்l பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றின் நகல் எடுத்து வருவது கட்டாயம். தேர்வில் விடைகளை குறிப்பிட, கருப்பு நிற பால் பாய்ன்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment