நீட் தேர்வு எழுதி உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அரசு எம்பிபிஎஸ் இடங்களுக்கு போட்டி அதிகமாக இருக்கும் : மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்




நீட் தேர்வு எழுதி உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அரசு எம்பிபிஎஸ் இடங்களுக்கு இந்த ஆண்டு போட்டி அதிகமாக இருக்கும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்



தமிழகத்தில் கடந்த ஆண்டு 26 அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் மாநில அரசுக்கு மொத்தம் 3,032 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்தது. மேலும் 11 அரசு மருத்துவ கல்லூரிகள் இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்படுகிறது. இந்த வருடம் கூடுதலாக 2 ஆயிரம் இடங்கள் அதிகரித்துள்ளது.


இந்த கல்லூரிகள் மூலம் 1,450 இடங்களும், கோவை அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களுக்கும் மத்திய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் அரசு எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை மட்டும் இந்த ஆண்டு 5,050 ஆக உயர்ந்து உள்ளது. இது தவிர 32 தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் 5,370 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 10,425 இடங்களில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வருடம் மருத்துவ படிப்புகளில் சேர தயாராக இருக்கும் மாணவ,மாணவிகளுக்கு இது ஒரு 'ஜாக்பாட்' ஆக கருதப்படுகிறது. ஒரே வருடத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மூலம் இந்த வாய்ப்பு கிடைக்கிறது.


மொத்தம் உள்ள அரசு மருத்துவ இடங்கள் 5050ல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் போக 92.5 சதவீத இடங்கள் மற்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. நீட் தேர்வு கடந்த வாரம் நடந்து முடிந்துள்ள நிலையில் அதன் முடிவு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வர வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவு தொடங்கும் என்று மருத்துவ கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டை விட இந்த வருடம் மாணவர்கள் அதிகளவு தேர்வு எழுதி உள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 227 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டன.


இந்த வருடம் இந்த எண்ணிக்கை 350 வரை உயர வாய்ப்பு உள்ளது. அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதி உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு 2000 அரசு மருத்துவ இடங்கள் அதிகரித்தாலும் அதற்கு கடுமையான போட்டி நிலவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீட் தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீட் தேர்வு முடிவு எப்போது வரும். மதிப்பெண் எவ்வளவு கிடைக்கும் என்ற மருத்துவ கனவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளனர்.

Comments

Popular posts from this blog