LKG, UKG Teachers: எல்கேஜி, யூகேஜிக்கு 5,000 சிறப்பாசிரியர்கள்.. யாருக்கு முன்னுரிமை?: அறிவித்த பள்ளிக்கல்வித்துறை





எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் கடந்த 2018ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கியது. இவ்வாறு மொத்தம் 2,381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு, அவற்றில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் படித்து வந்தனர். எனினும் கொரோனா காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.


இந்நிலையில் 2022- 23ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த மழலையர் வகுப்புகள் அங்கன்வாடிகளுக்கு மாற்றப்படுவதாகவும், மழலையர் வகுப்புகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த இடைநிலை ஆசிரியர்கள், அவர்கள் ஏற்கனவே பணியாற்றி வந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதாகவும் தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


அங்கன்வாடிகளிடம் மழலையர் வகுப்பு


இதன்படி, சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் அங்கன்வாடி பணியாளர்களே எல்கேஜி, யூகேஜி வகுப்பு மாணவர்களை கவனித்துக் கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மழலையர் வகுப்பு மாணவர்களை அங்கன்வாடி பணியாளர்கள் கவனித்து, கற்பிப்பது சாத்தியமா என்று கேள்வியும் எழுந்தது.


இதற்கிடையே மாணவர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து எல்கேஜி, யூகேஜி வகுப்புகளைப் பள்ளிக் கல்வித்துறையே ஏற்று நடத்தும் என்று அறிவிப்பு வெளியானது.


அன்புமணி கோரிக்கை


இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களின் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் பாமக தலைவர் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். அதில், ''தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். ஓராசிரியர் பள்ளிகள் தவிர, மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.


எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு 2 முதல் 3 ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி தரமான கல்வியை வழங்க முடியும். இத்தகைய பள்ளிகளின் மாணவர்களால் கடினமான மேல்நிலை மற்றும் உயர்கல்வியையும், போட்டித் தேர்வுகளையும் எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?'' என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.


இதற்கிடையே,தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளைப் பள்ளிக் கல்வித்துறையே ஏற்று நடத்தும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், மழலையர் வகுப்புகளுக்கான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்த 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் (LKG, UKG) வகுப்புகளை இவர்கள் நடத்துவர். இவ்வாறு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


முதற்கட்டமாக 2,500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தொடக்கக் கல்வியில் பட்டயப் படிப்புப் படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog